கொள்ளிடம் உயர்மட்ட பாலம் வழியாக பேருந்து போக்குவரத்து தொடங்கப்படுமா?
திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.90 கோடியில் 1,500 மீட்டர் நீளத்தில் பொது போக்குவரத்திற்கான பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலப்பணிகள் முடிக்கப்பட்டு அதன் இருபுறமும் உயர்மட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய பாலத்தால் நேரடியாக திருச்சியில் இருந்தும் தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து திருச்சிக்கும் இடையே பஸ் போக்குவரத்து வசதி கிடைக்கும், இதன்மூலம் நேரம் மிச்சமாகும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் பாலப்பணி முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் இந்த பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. மாறாக, இந்த பாலத்தின் வழியாக கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளதால் மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படாததால் திருச்சியில் இருந்து வருபவர்கள் கிளிக்கூடு கிராமத்தில் இருந்து பாசன மதகுகள் உள்ள கொள்ளிடம் பாலத்தில் நடந்து வந்து கரிகாலன் மணிமண்டபம் பகுதியில் தஞ்சைக்கு பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதேபோல, தஞ்சையில் இருந்து திருச்சி செல்ல கரிகாலன் மணிமண்டபம் பகுதியில் இறங்கி 2 கிலோமீட்டர் நடந்து சென்று திருச்சி கிளிக்கூடுபகுதிக்கு சென்று பஸ் ஏறவேண்டி உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவு சிரமப்படுகின்றனர்.
சமீபத்தில் கல்லக்குடியில் இருந்து புள்ளம்பாடி, பூண்டிமாதாகோவில், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி வழியாக தஞ்சைக்கு பஸ் விடப்பட்டது. அதேபோல, இந்த புதிய பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை, கோவிலடி, பூண்டி மாதா பேராலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் பஸ்கள் இயக்கி இந்த பகுதி மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu