திருச்சியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு போலீசார் வலைவீச்சு
X

கொலை செய்யப்பட்ட செல்வி.

திருச்சி விமான நிலையம் பகுதியில் மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் குமரன் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவருக்கு 23 வருடங்களுக்கு முன்பாக மோகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்களுக்கு மகாலட்சுமி, மணிவாசகம் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனிடம் இருந்து செல்வி விவாகரத்து பெற்றுள்ளார். அதன் பின்னர் 18 வருடங்களாக செல்வம் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். செல்வியின் மகள் மகாலட்சுமிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மகளின் திருமணத்திற்காக, செல்வியின் சொந்த ஊரான மானாமதுரையில் உள்ள வீட்டை விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து மகளின் திருமணத்தை செல்வி நடத்தி வைத்துள்ளார்.

இதனை ஏற்காத செல்வம் தனது முதல் மனைவிக்கு பிறந்த கவியரசுக்கு திருமணம் செய்து வைக்காமல், உனது மகளுக்கு மட்டும் செலவு செய்து திருமணம் வைத்து விட்டாய் என்று கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இன்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் இருந்த அரிவாளால் செல்வியை வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த செல்வி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செல்வம் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற ஏர்போர்ட் போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!