பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு

சைக்கிள் பேரணி வந்த பெண் போலீசார் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவுடன் உள்ளனர்.
பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 750 கி.மீ தூரம், 100க்கும் மேற்பட்ட பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிர்களை கொண்ட சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் கடந்த 17.03.2023-ந்தேதி சென்னையில் துவங்கி வைத்தார்.
அப்பேரணியானது கடந்த 5 நாட்களாக திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் வழியாக சுமார் 350 கி.மீ கடந்தும், நேற்று(21.03.2023)-ந்தேதி மாலை திருச்சி வந்தடைந்தது. இச்சைக்கிள் பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா மற்றும் காவல் துணை ஆணையர்கள், திருச்சி சிறப்புகாவல்படை முதலணி தளவாய் ஆகியோர் வாழ்த்தியும், உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடா;ந்து திருச்சி முதலணியில் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உள்ள தடைகளை களையவும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும், ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்க வேண்டும் எனவும், சைக்கிள் பேரணியில் செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சிறப்பு காவல்படை10-ம் அணி தளவாய் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இச்சைக்கிள் பேரணியானது இன்று (22.03.2023)-ந்தேதி அதிகாலை துவரங்குறிச்சி வழியாக கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu