நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி திருச்சி அருகே விவசாயிகள் போராட்டம்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சி அருகே அல்லித்துறையில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மா.பா. சின்னத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சியை அடுத்த அல்லித்துறையில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் மா.பா. சின்னத்துரை தலைமை தாங்கினார்.
உய்யகொண்டான், குடமுருட்டி, கோரையாறு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து திருச்சி மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துவது போல் 1921ம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்களின் படி நீர்வழிப்பாதைக்கும் நிலம் கையகப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களின் நீர் செல்லும் பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் உரிமை கூட்டணி ஜோசப், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் ஷைனி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஜார்ஜ், அகில இந்திய ஏழை மக்கள் கட்சி ஜான் பாஷா,வழக்கறிஞர் கமருதீன், தமிழ் தேசிய பேரியக்கம் கவித்துவன், ஆரோக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பு தண்ணீர் அருந்தா போராட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆறுகள் புனரமைப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu