வைகோ மகன் துரை வைகோ போட்டியிட போகும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி

வைகோ மகன் துரை வைகோ போட்டியிட போகும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி
X

துரை வைகோ.

வைகோ மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களில் தி.மு.க நின்றது. காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கள், வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது

இந்தசூழலில்தான் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய நிலவரப்படி ஐ.ஜே.கே தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைத்து தேர்தலை சந்திக்க திட்டம் வகுத்திருக்கின்றன. அதற்கு வசதியாக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தொகுதி உடன்பாடு குழுவை அமைத்திருக்கிறது, தி.மு.க. இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் தான் திருச்சி தொகுதிக்கு குறி வைத்திருக்கிறது, ம.தி.மு.க. இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொகுதியை ம.தி.மு.க குறிவைக்க காரணம் என்ன என்பது குறித்த கேள்வியுடன் திருச்சியை சேர்ந்த 'இந்தியா' கூட்டணி மூத்த தலைவர்கள் சிலர் "கடந்த 2019 தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது டெல்லி சிபாரிசு செய்ததால்தான் தி.மு.கவும் சம்மதித்தது. பிறகு கே.என்.நேரு தலையீட்டால் தான் வெற்றி பெற்றார். வாக்கு சேகரிப்பின் போதே சரியான நேரத்துக்கு திருநாவுக்கரசர் வரவில்லை. இதனால் திமுக-வினர் பல தருணங்களில் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர். இருப்பினும் தலைமையின் உத்தரவினால் பெரிது படுத்தாமல் அமைதியாக இருந்தனர். ஆனால் வெற்றிக்கு பிறகும் திருநாவுக்கரசரின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

குறிப்பாக தொகுதி மக்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்பதில்லை. தேர்தலுக்கு பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை. இந்தநிலையில்தான் சொந்த கட்சியை சேர்த்த நிர்வாகிகள் பலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். இதனால் அவர்கள் மீண்டும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளால் மீண்டும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்க தி.மு.க தயங்குகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட திருநாவுக்கரசரும் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் எனவே இந்த சூழ்நிலையை உற்றுநோக்கி பார்க்கும் ம.தி.மு.க திருச்சி தொகுதியை தங்களுக்கு கேட்கிறது" என்றனர்.

இதையடுத்து, 'திருச்சி தொகுதியை பெறுவதற்கான ம.தி.மு.கவின் முயற்சி எந்த கட்டத்தில் இருக்கிறது?' என ம.தி.மு.கவின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவிடம் கேட்டபோது "கடந்த தேர்தலிலேயே திருச்சி தொகுதி எங்களுக்கு வேண்டும் என கேட்டோம். தலைவர் வைகோவை நிறுத்துவதற்கான வேலைகளை செய்தோம். கல்லூரிகளில் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் அவர் பேசினார். கடைசியில் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில்தான் வரும் தேர்தலில் திருச்சி தொகுதியை ம.தி.மு.கவுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் கேட்டு இருக்கிறோம். இங்கு எங்களுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. திருச்சியில் கடந்த 2004-ல் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எல்.கணேசன் வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் 65 வார்டுகளிலும் மக்களின் ஆதரவு இருக்கிறது. 1996 முதல் தனியாகவே 3 வார்டுகளுக்கு வெற்றி பெற்று வருகிறோம். இந்தமுறை 2 வார்டுகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மேலும் திருச்சி தொகுதியில் இந்தியா கூட்டணிதான் பலமாக இருக்கிறது. எனவேதான் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்கிறோம். அண்ணன் துரை வைகோவை நிறுத்த முடிவு செய்திருக்கிறோம். எனவே அவர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். இதேபோல் தலைவர் வைகோ தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி பணிகளையும் முடக்கி விட்டிருக்கிறோம் என்றார்.

Tags

Next Story