மகனுக்கு பதவி: வைகோவிற்கு பா.ஜ.க. வழக்கறிஞர் அணி செயலாளர் கண்டனம்
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருப்பவர் பி.பன்னீர்செல்வம். இவர் ஆரம்பத்தில் தி.மு.க., அதன்பின்னர் ம.தி.மு.க கட்சியில் இருந்து பணியாற்றினார். தற்போது பி.ஜே.பி.யில் அங்கம் வகித்து வருகிறார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவிற்கு கட்சியின் தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கி இருப்பது பற்றி பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் வைகோவுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவன் என்ற அடிப்படையில் அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு மகா நடிகர். கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தபோது தனது மகன் மு.க. ஸ்டாலினை வாரிசாக திணிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் வைகோ. அப்போது அவரது அனல்பறக்கும் உரையை கேட்டு இளைஞர் பட்டாளம் தி.மு.க.வில் இருந்து வெளியேறியது.
வைகோ தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தாங்கமுடியாத இளம் தொண்டர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது தேக்குமர உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் என்ன காரணத்தைச் சொல்லி விட்டு வெளியே வந்தாரோ அதே காரணத்திற்கான செயலைத்தான் வைகோ இப்போது தனது கட்சியில் மகனுக்கு பதவி வழங்கி செய்திருக்கிறார். வைகோவிற்காக உயிர் மாய்த்த உண்மையான தி.மு.க. தொண்டர்களின் ஆன்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது. இன்னும் அவரை நம்பி செல்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu