'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார்'- அமைச்சர் நேரு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி வழங்கினார்.
திருச்சி உறையூர் பாத்திமா நகர் விவேகானந்தா தெருவில் வசித்த ஆர்.கிருஷ்ணன் (வயது 65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரத்தில் தொடர் கனமழையால் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து விட்டார். அதை தொடர்ந்து அவரது மனைவி மேரி கிருஷ்ணனிடம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிர் இழப்பிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று வழங்கி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது
திருச்சியில் சில பகுதிகளில் தண்ணீர் வடியாமல் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைதான் தற்போதும் உள்ளது. வெக்காளியம்மன் கோயிலில் இருந்து கோரையாறு வரை முழுமையாக இருபுறமும் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் இங்கு தண்ணீர் அதிகம் வரும் பகுதிகளில் சிமெண்ட் சாலை போடப்படும் திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்கான செலவு ரூ.18.5 கோடி என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் பாதிப்புள்ள இடங்களில் தண்ணீர் பம்செட் வைக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவருடன் சுற்றுப்பயணம் செய்த போது விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்தும் கணக்கிடப்பட்டு உள்ளது. தேவையான நிதி உதவி பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்தால், தமிழக அரசு நடத்த தயாராக இருக்கிறது என்றார். அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஆர்.டி.ஓ. தவச்செல்வம், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu