கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம்.

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனைவிதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள நகர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (வயது 62). இவரது மனைவி மனோன்மணி (வயது 57) இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத் (வயது 42 )என்பவருக்கும் இடையே வீட்டின் அருகில் உள்ள ஒரு சந்து தொடர்பாக இட பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 18 -3 -2017 அன்று வினோத்தின் மனைவி ஆரோக்கிய செல்விக்கும், மனோன்மணியின் அண்ணி கமலவல்லி என்பவருக்கும் இடையே இது சம்பந்தமாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனை பார்த்த தர்மர் அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் மற்றும் மருதை (வயது 36) ஆகிய இருவரும் கடந்த 20-3- 2017 அன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த தர்மரை கட்டையால் அடித்து தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த தர்மர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 21ஆம் தேதி வினோத்தும் மருதையும் லால்குடி அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து படுக்கையில் படுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தர்மரை அரிவாளால் வெட்டினார்கள். இதில் தர்மரின் வலது கை சுண்டு விரல் துண்டானது. மேலும் கையில் பல இடங்களிலும் காயம் பட்டது.

இதனைத் தொடர்ந்து தர்மரின் மனைவி மனோன்மணி அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தர்மரை கொலை செய்ய முயன்றதாக வினோத்தையும், மருதையையும் கைது செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை நடந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் வினோத் மற்றும் மருதை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வினோத் மற்றும் மருதை ஆகிய இருவருக்கும் தலா 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.5500 அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தலைமை குற்றவியல் நடுவர் சாந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!