திருச்சி கடை வீதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா

திருச்சி கடை வீதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா
X

திருச்சி கடைவீதியில் கூட்டத்தை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராவுடன்கூடிய மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 4-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் தீபாவளிக்குத் தேவையான ஜவுளிகளை வாங்க திருச்சி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கிராமப்புறங்களில் விவசாயப்பணிகள் தொடங்கப்பட்டு கையில் பணப்புழக்கம் உள்ளதால் கிராம மக்கள் தீபாவளி கொண்டாட ஆர்வமுடன் உள்ளனர்.

அதே போல பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுதபூஜை நாளிலேயே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதாலும் தங்கள் குடும்பத்திற்கு தேவையான துணிமணிகள், நகைகள், டி.வி,பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஜவுளி கடைகள்,நகைக் கடைகள் அதிகமுள்ள சின்னக் கடைவீதி, பெரிய கடைவீதி,சிங்காரத்தோப்பு, மேலபுலிவார்டு ரோடு, சாஸ்திரி ரோடு, தில்லைநகா் பகுதிகளில் குடும்பத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.

கடைகளுக்கு வரும் பொதுமக்கள், அவா்கள் பயன்படுத்தும் வாகனங்களால் சாலைகள் போக்குவரத்நு நெரிசல் ஏற்படுகின்றன.எங்கும் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களின் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடுவதைத் தடுக்கும் வகையில், மாநகர போலீசார்,என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு, சின்னக்கடைவீதி, கல்லூரிச்சாலை, மேலபுலிவார்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரத்துடன், கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் சீருடை அணிந்த போலீசார் மற்றும் சாதாரண உடையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆட்டோக்கள் செல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் என்.எஸ்.பி. ரோட்டில் தெப்பக்குளம் அருகில் வழக்கமாக அமைக்கப்படும் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வந்தாலும் கூட,பொதுமக்கள் பலரும் முகக் கவசம் அணியாமல் கடைவீதிகளுக்கு குடும்பத்துடன் வந்து செல்வது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story