மழை பாதிப்பு கண்ணுக்கு தெரியலியா? திருச்சி நகர மக்கள் கொந்தளிப்பு
திருச்சி லிங்கநகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருச்சி நகரில் கடந்த ஒரு வாரகாலமாக விட்டு விட்டு பெய்து வந்த மழை கடந்த 2 நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி கோரையாறு, உய்ய கொண்டான், குடமுருட்டி வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வாய்க்கால்களில் உடைப்பு இல்லை என்றாலும் அதிக அளவில் செல்லும் தண்ணீர் வடிநில பகுதிகளில் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம், வார்டு,60 லிங்க நகர் மேற்கு பகுதியில்,மழையின் காரணமாக பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. தெருக்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தேங்கி நிற்கும் தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளும் மிதந்து வருகின்றன. மேலும் மூளைக் காய்ச்சலை உருவாக்கும் பன்றிகளும், டெங்கு கொசு பெருமளவில் சாக்கடை நீரால் வருவதற்கு அபாய பகுதியாக லிங்க நகர் மேற்குப் பகுதி உள்ளது.
இதே போல் உறையூர் பாத்திமா நகர், மங்கள் நகர், தியாகராஜ நகர், ஏ.யூ.டி. நகர், பேங்கர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் இப்பகுதி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
மாவட்ட , மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் முடிந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இதுவரை இந்த பகுதிக்கு வந்து பார்வையிடாதது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி லிங்கநகர் மற்றும் பாத்திமா நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளதா? திருச்சியும் கடுமையாக தான் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டுமே அமைச்சர்கள் முகாமிட்டு பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் படும் அவதி தொகுதி அமைச்சரின் கண்ணிற்கு தெரியவில்லையா? கடந்த 2005ம் ஆண்டு இதே போல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ராணுவ படகுகள் மூலம் வீடு வீடாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. தண்ணீர் வடியும் வரை மக்கள் வெளியில் சென்று வர படகுகள் வழங்கினார்கள். ஆனால் இப்போது ஆறுதல் கூறுவதற்கு கூட அமைச்சர் வராதது எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu