திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிய வரவு மோப்ப நாய் 'பாண்டு'

திருச்சி மாநகர காவல் துறையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மோப்ப நாய் பாண்டு மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவிற்கு ஷேக்கன் கொடுக்கும் காட்சி.
திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிய வரவாக மோப்ப நாய் பாண்டு வந்துள்ளது.
தமிழக காவல்துறையில் 'டாக் ஸ்குவாட்' எனப்படும் ஒரு பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில் பராமரிக்கப்படும் மோப்ப நாய்கள் திருட்டு, வெடிகுண்டு கண்டுபிடித்தல், கொலை கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குதல் மற்றும் போதை பொருட்களை கண்டுபிடித்தல் ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மோப்ப நாய்களுக்கு தனித்துவமான பயிற்சி அளித்து அவற்றை காவல்துறையினர் பராமரித்து வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிதாக ஒரு மோப்பநாய் வந்து சேர்ந்துள்ளது அதற்கு 'பாண்டு' என பெயரிட்டுள்ளனர். இந்த மோப்ப நாய் போதை பொருட்களை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
திருச்சி மாநகரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தான் போதை பொருட்களை கண்டுபிடிக்க இந்த பாண்டு மோப்பநாய் மாநகர காவல் துறையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்க்கு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வரை கோவை பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா அதனை செல்லமாக தடவி கொடுத்து வரவேற்றார். போலீசார் அளித்த பயிற்சியின்படி அந்த மோப்பநாய் மாநகர போலீஸ் கமிஷனருக்கு சல்யூட் அடித்து ஷேக்கன் கொடுத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu