திருச்சி பெரியார் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கம்
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா மற்றும் உலக ஒசோன் தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் கே.சி.நீலமேகம் முன்னிலை வகித்தார்.
தண்ணீர் அமைப்பு மாணவர் மன்ற செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் கடந்த 40 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்த்து வருகிறேன். பெருகிவரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகள், வாகனப்பெருக்கம், கரும்புகை கரியமிலவாயு வெளியேற்றம் இவற்றால் ஓசோன் படலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சூரிய ஒளியின் தாக்கம் புவியில் அதிகரிக்கிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் மரங்கள்தான். இந்தப் புவியை மரங்களை விட்டால் காப்பாற்ற எவரும் இல்லை. எனவே நாட்டு மரங்கள், அரிய மரங்களை தொடர்ந்து நட்டு பராமரித்து வளர்த்து வருகிறேன். இத்தகைய சமூக பொறுப்பு, அக்கறை இளைய தலைமுறைக்கு வர வேண்டும். நீங்கள் களத்தில் இறங்கி பூமிப்பந்தை பசுமையாக மாற்றிட முன்வரவேண்டும் என்றார்.
முன்னதாக வளாகத்தில் நீர் மருது மரங்கள் நடப்பட்டது. தொடர்ந்து துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் குணசேகரன் ஒருங்கிணைத்தார். முனைவர் காசிமாரியப்பன் நன்றி கூறினார். தண்ணீர் அமைப்பு நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா உள்ளிட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu