பத்மஸ்ரீ விருது பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் இந்தியா கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கருப்பையாவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அ.ம.மு க சார்பில் கவுன்சிலர் செந்தில் நாதனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு பேரவை ராஜேஷ் களமிறங்கியுள்ளார்.
இது தவிர பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர்களது பிரச்சாரம் அனல் பரந்த படி உள்ளது.
தி.மு.க. தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் திருச்சி சிறுகனூரில் தான் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோலில் தான் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டு தமிழக முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறார்.
இப்படி முக்கிய அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிற வேளையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரன். சுயேச்சைகள் பலர் களத்தில் இருந்தாலும் மற்றவர்களை விட இந்த தாமோதரனுக்கு திருச்சி மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு அதற்கு அவர் கிராமாலயா என்ற பெயரில் சுமார் 40 ஆண்டுகளாக தொண்டு நிறுவனம் நடத்தி வருவது தான் காரணம் ஆகும்.
திருச்சி உறையூர் பகுதியில் தனது கல்லூரி படிப்பு காலத்திலேயே சாதாரண அளவில் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய இவர் மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் அன்றாட பிரச்சினைகளான குடிநீர், சுகாதாரம் இவற்றிற்காக பாடுபட்டு வருகிறார். திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் இவர் அதிக அளவில் கழிவறைகளை கட்டிக் கொடுத்து உள்ளார்.
அதேபோல திருச்சி மாநகராட்சி பகுதியிலும் திறந்த வெளி கழிப்பிட பயன்பாட்டில் இருந்து மக்களை மாற்றுவதற்காக கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளார். இதன் காரணமாக திருச்சி கல்மந்தை பகுதி திறந்த வெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக பரிணாம வளர்ச்சி பெற்று உள்ளது. 40 ஆண்டுகளாக மக்களின் சுகாதாரத்திற்காக பாடுபட்டு வரும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்திய ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்திடம் இந்த விருதை பெற்று வந்துள்ளார் தாமோதரன்.
அந்த வகையில் எந்த ஒரு சுயேச்சை வேட்பாளருக்கும் , ஏன் அவரை எதிர்த்து போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட இல்லாத ஒரு பெருமை தாமோதரனுக்கு உள்ளது. இவருக்கு கேஸ் ஸ்டவ் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிகராக இவரும் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். தினமும் திருச்சி மாநகர மக்கள் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
திருச்சியில் மட்டுமல்ல புதுக்கோட்டை மாவட்டத்திலும் இவரது தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் இருப்பதால் அங்கேயும் மக்களுக்கு அறிமுகமான ஒரு வேட்பாளராக உள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான துரைவைகோவும் ,அதிமுக வேட்பாளர் கருப்பையாவும் வெளியூரை சேர்ந்தவர்கள். துரை வைகோ நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். கருப்பையா திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவர் தான் என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். செந்தில்நாதன் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். அதேபோல தாமோதரனும் திருச்சி உறையூரை பூர்வமாக கொண்டவர் என்பதால் மண்ணின் மைந்தருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் அவர் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
தனது பிரச்சாரம் தொடர்பாக தாமோதரன் கூறுகையில் ‘மக்களுடன் மக்களாக பழகி வருகிறேன். 40 ஆண்டுகளாக நான் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மக்களை அன்றாடம் சந்தித்து வருகிறேன். இதனால் தான் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. நான் தேர்தலில் நிற்பதை அறிந்த தன்னார்வலர்கள் என்னுடைய தொண்டு நிறுவனத்தால் பயனடைந்த பகுதி மக்கள் தினமும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களாகவே எனது சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். இதனை மற்ற எந்த வேட்பாளருக்கும் இல்லாத பெருமையாக நான் கருதுகிறேன். மேலும் திருச்சி நகரில் உள்ள 60 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பெண்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
நான் வெற்றி பெற்றால் திருச்சியையும், புதுக்கோட்டையையும் இந்தியாவில் முன்மாதிரி நகரங்களாக மாற்றி காட்டுவேன். மத்தியில் அமையும் அரசுடன் இணக்கமான செயல்பாட்டை கொண்டு எனது மக்கள் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும். எனக்கு சமுதாய வாக்குகளும் உள்ளன. ஆனால் நான் சமுதாயத்தை நம்பி மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் நம்பித்தான் களத்தில் இறங்கி உள்ளேன். இளைய தளபதி விஜய் எனக்கு ஆதரவு அளித்தால் நிச்சயமாக நான் வெற்றி பெற முடியும். அவரது ஆதரவையும் கோரி உள்ளேன்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் மதுரம் என்கிற சுயேட்சை வேட்பாளர் தான் வெற்றி பெற்றுள்ளார். அந்த வரிசையில் சுயேச்சையாக போட்டியிடும் நானும் வெற்றிக்கொடி நாட்டுவேன்’ என கூறுகிறார் தாமோதரன்.
சுயேச்சைகளில் இவர் ஒரு வித்தியாசமானவர் என்பது அவரது பிரச்சாரத்தை பார்த்தாலே தெரிகிறது. திருச்சி மக்களை அன்றாடம் சந்தித்து வருகிறார். அவரது பிரச்சார யுத்தியை கண்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கூட ஒரு நிமிடம் கலங்கி போய்தான் உள்ளார்கள் என்பது கூடுதல் தகவலாக உள்ளது.
ஏனென்றால் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை தேடி வருவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அவர்களை பார்க்க வாக்களித்த மக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆனால் தாமோதரன் தொண்டு நிறுவன நிர்வாகி அதுவும் அவர் செய்த தொண்டிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் அன்றாடம் மக்களை சந்திப்பதே அவரது முதல் பணியாக இருந்து வருகிறது. இதனை மக்கள் நினைத்து பார்த்து விட்டால் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் முடிவு தான் திருச்சி தொகுதியில் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் அரசியல் கட்சியினர் மனதில் கேள்விக்குறியாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu