திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் கட்டுமான பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணியை நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதும் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 30ந்தேதி திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு கட்டுமான பணியை ஆய்வு செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், நகர பொறியாளர், ஒப்பந்ததாரர்களுடன் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக ரூ. 9 .90 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துகட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் கொட்டப்பட்டு குளத்தில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய வண்ண மின்விளக்குகள் அமைக்கும் பணி,குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu