திருச்சி மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை தெரியும்
![திருச்சி மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை தெரியும் திருச்சி மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை தெரியும்](https://www.nativenews.in/h-upload/2024/03/26/1882914-pampa.webp)
கடந்த 1993 ஆம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் மதிமுகவிற்கு குடை சின்னம் வழங்கப்பட்டது அதன் பின்னர் 2004 நாடாளுமன்ற தேர்தல் முதல் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போதும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் மதிமுக விற்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வைகோவின் மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் வேட்பாளர் துரைவைகோ செத்தாலும் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உதயன் சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என உணர்ச்சி பொங்க மேடையை தட்டி பேசினார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை கூட்டணியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் வரை சென்றது ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மதிமுக வேட்பாளர் வெற்றி பெற செய்வதற்கான வேலைகளில் திமுகவினர் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதாலும் சின்னம் ஒதுக்கீடு கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்க வேண்டும் என்பதாலும் தேர்தல் ஆணையத்திற்கு பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிடும்படி மதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 9 மணிக்குள் தகவல் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதன் காரணமாக மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா அல்லது வேறு ஏதாவது பொது சின்னம் தான் ஒதுக்கப்படுமா என்பது நாளை காலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu