மழை நீரால் சூழப்பட்டு தண்ணீரில் தத்தளிக்கும் திருச்சி ஜே.கே.நகர்

மழை நீரால் சூழப்பட்டு தண்ணீரில் தத்தளிக்கும் திருச்சி ஜே.கே.நகர்
X

திருச்சி ஜே.கே.நகரில் வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளன.

மழை நீரால் சூழப்பட்டு இருப்பதால் திருச்சி ஜே.கே.நகர் பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள்.

35- வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். ஜே.கே. நகரை மையமாக வைத்து ஆர்.எஸ். புரம்,ஆர்.வி.எஸ். நகர், ராஜ கணபதி நகர், லூர்து நகர், முகமது நகர், திருமுருகன் நகர் உள்ளிட்ட ஏராளமான விரிவாக்கப் பகுதிகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வந்துவிட்டால் ஜே.கே. நகர் தண்ணீரால் சூழப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு பருவ மழை தீவிரமடைந்து தினமும் மழை பெய்து வருவதாலும், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாலும், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் பணிக்காக நடைபெற்று வரும் மெகா பணி அங்கு தேங்கிய தண்ணீர் திறந்து விடுதல் மற்றும் காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வடிகால்கள் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் ஆகியவற்றினால் ஜே .கே. நகர் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொட்டப்பட்டு குளம் நிரம்பி விட்டது.



இதன் காரணமாக தண்ணீர் ஏரியை விட்டு வெளியேறி ஜே.கே. நகரின் இரண்டாவது லே அவுட் பகுதிகளுக்குள் வீடுகளை சூழ்ந்த படி உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளதால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல், வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது வீடுகளை சூழ்ந்து நிற்பது மழைநீரா,கழிவுநீரா என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவில் பச்சை பசேலென பாசானம் கலந்த நீரால் தொற்று நோய் பரவி விடுமோ என்ற அச்சம் இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாம்பு ,நண்டு நட்டுவாக்காலி,தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஜே.கே. நகர் வாசிகள் தண்ணீரில் தத்தளித்து சொல்ல முடியாத வேதனையுடன் கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளனர். ஜே. கே. நகர் பகுதி மக்களின் வேதனையைப் போக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் தற்போதைய தலையாய கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!