மோசமான சாலைகளால் ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்க முடியாத திருச்சி நகரம்
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. வழக்கமாக அக்டோபர் மாதம் இறுதியில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அறிவிப்பிற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் நேற்று இரவு சுமார் 5 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தொடங்கிய மழை விடிய விடியப் பெய்ததோடு காலை 7 மணி வரை நீடித்தது. இடி, மின்னல், காற்று எதுவும் இன்றி அமைதியாக மழை பெய்ததால் தண்ணீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சியில் கடந்த ஒரு வார காலமாக பகல் முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயில் கொளுத்திய நிலையில்தான் நள்ளிரவுக்கு மேல் மேக வெடிப்பு ஏற்பட்டது போல் மலை கொட்டி தீர்த்தது. இந்த மழையை மக்கள் வாழ்வாதாரத்திற்காக வரவேற்றாலும் மழை ஏற்படுத்திய தாக்கத்தால் சோகம் அடைந்துள்ளனர்.
அதற்கு காரணம் திருச்சி நகரில் இந்த ஒரு நாள் பெய்த மழைக்கே தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. திருச்சி நகரில் கே.கே. நகர் பகுதிகள் மற்றும் தில்லைநகர், பொன்மலை, கருமண்டபம் பகுதிகள் விமான நிலையப் பகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட மூன்றாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் குத்தி குதறப்பட்டு விட்டன. கருமண்டபம், ஜே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள பகுதிகளில் ஏற்கனவே சரியான சாலை வசதிகள் கூட கிடையாது. அந்த இடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளும் என்னும் சரிவர மூடப்படாமல் உள்ளன. சில இடங்களில் பாதாள சாக்கடை குழிகள் மூடப்பட்டாலும் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பணிகளை அப்படியே விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறின.
இதன் காரணமாக இந்த தெருக்களில் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெளியே எடுத்து வர முடியாமல் அவதிப்பட்டனர். பல இடங்களில் கார்கள் சாலை பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வெளியில் இருந்தும் கார்கள் இந்த தெருக்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருச்சி கருமண்டபம் சக்தி நகர் பத்தாவது கிராஸில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வீடு உள்ளது. இந்த தெரு முழுவதும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் குண்டும் குழியுமாகக் கிடந்தன. இந்த குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கியதால் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவசரத் தேவைக்காக வந்த கார்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் பின்னர் அவற்றை பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் மீட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதே போல திருச்சி ஜே. கே. நகர், ராஜகணபதி நகர், திருமுருகன் நகர் பகுதிகளில் சரியான மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஜே.கே. நகர் பாலாறு தெருவில் தேங்கிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. காலி பிளாட்டுக்களில் தேங்கியிருந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் வார்டு கவுன்சிலர் ஜாபர் அலி ஆகியோர் அங்கு வந்து மழை நீர் தேங்கி இருந்த இடங்களில் பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் தற்காலிக வடிகால் வசதி ஏற்படுத்தி தண்ணீரை வடிவமைத்தனர். நகரின் பல பகுதிகளிலும் இது போன்ற நிலை ஏற்பட்டது. ஒரு நாள் மலைக்கு தாக்க முடியாமல் தாக்குபிடிக்க முடியாமல் திருச்சி தடுமாறுவதால் மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பாதாள சாக்கடை அவசியமான ஒன்றுதான். ஆனால் அதை வருட கணக்கில் போட்டு இழுத்தடிக்காமல் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற இடங்களில் உடனடியாக தார் சாலை போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மழை நீர் வடிகால்கள் இருக்கும் இடங்களில் அவற்றை நன்கு ஆழமாக தூர்வார வேண்டும். மழை நீர் வடிவில் இல்லாத பகுதிகளில் புதிதாக வடிகால் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று சுற்றுப்பயணம் செய்து மழைநீர் பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்ற தற்காலிக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பாதாள சாக்கடை திட்ட மூன்றாவது கட்ட பணிகளை பொருத்தவரை புறநகர் பகுதிகளில் தான் அதிக அளவில் நடந்து வருகின்றன. அங்கு ஏற்கனவே தார் சாலைகள் கிடையாது. மண் பாதைகள் தான் உள்ளன. தற்போது பெய்த மழையால் அந்த மண்பாதைகள் எல்லாம் சேறும் சகதியும் ஆக மாறிவிட்டன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் டூவீலரில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் இந்த அவதியை போக்க மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிகளில் கருங்கல் ஜல்லி மற்றும் பாறை மணல் அடித்து செம்மைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu