திருச்சியில் அரசு பஸ்கள் மோதலால் ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயம்
திருச்சியில் இருந்து நேற்று இரவு அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த டிரைவர் கருப்பசாமி ஓட்டிச்சென்றார். அதை பின் தொடர்ந்து திருச்சி அரசுப்போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட சிறப்பு பஸ் ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ்சை நொச்சியம் அருகே உள்ள நெற்குப்பையை சேர்ந்த டிரைவர் சின்னசாமி ஓட்டினார். திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் நம்பர் 1 டோல்கேட் அருகே'ஒய்' ரோடு சந்திப்பு பகுதியில் சென்றபோது, மாடு ஒன்று ரோட்டை கடக்க முயன்றது.
இதைத்தொடர்ந்து முன்னால் சென்ற அரசு விரைவு பஸ் டிரைவர் கருப்பசாமி திடீரென பிரேக் போட்டார். அந்த வேளையில் பின்னால் வந்த அரசு பஸ்சானது, அரசு விரைவு பஸ்சின் பின்பக்கத்தில்மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு விரைவுபஸ்சில் பயணம் செய்த விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பினர்.பின்னர் மாற்று பஸ்கள் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.
தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்குள்ளான இரண்டு பஸ்களும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுதொடர்பாக திருச்சி வடக்குபோக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu