சரக்குகளை கையாண்டதில் திருச்சி கோட்ட ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை

சரக்குகளை கையாண்டதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிக வருவாய் ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டம் எப்போதுமே அதிக அளவில் சரக்குகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடப்பு நிதியாண்டில் அதாவது 2002 ஏப்ரல் 1 முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சுமார் 11 மில்லியன் ( ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்) சரக்குகளை கையாண்டு ரூ.673 கோடியை வருவாயாக ஈட்டி உள்ளது. இது திருச்சி கோட்டத்தின் மொத்த வருவாயில் 86.80 சதவீதம் ஆகும்.
இந்த வருவாய் கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்த 53.32 சதவீதம் வருவாயை விட அதிகமாகும்.
இதில் நிலக்கரி மூலம் ரூ.465.05 கோடியும், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் மூலம் ரூ.106.04 கோடியும், சிமெண்ட் மூலம் ரூ.43.62 கோடியும் கிடைத்து உள்ளது.
நிலக்கரி ஏற்றியதின் மூலம் மட்டும் 135.6 சதவீதம் வருவாயும்,உணவு தானியங்கள் ஏற்றி இறக்கியதன் மூலம் 61.23 சதவீதமும் வருவாய் அதிகரித்து உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சரக்குகளை கையாண்டதில் தெற்கு ரயில்வேயில் அதிக வருவாயை ஈட்டி திருச்சி கோட்டம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருச்சி கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்தின் மூலம் 11.685 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்று சாதனை படைக்க காரணமாக இருந்த திருச்சி கோட்ட ரெயில்வே பணியாளர்களுக்கு கோட்ட ரயில்வே சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu