திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் பிரதீப்குமார்
திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.10.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2024 - ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வெளியிடப்பட்டது. அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மற்றும் தொடர் திருத்தம் செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு:-
வ. எண், சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர், 05.01.2023 அன்றைய நிலையில் வாக்காளர்கள் விபரம் 05.01.2023-இல் இருந்து தொடர் திருத்தங்களின் போது பெறப்பட்ட மனுக்களின் பேரில் 27.10.2023 நாளில் வாக்காளர்கள் விபரம்
வ.எண், ஆண் பெண் பிற மொத்தம் ஆண் பெண் பிற மொத்தம்
(05.01.2023-ல் இருந்த வாக்காளர்) (27.10.2023-ல் வாக்காளர்கள்)
1) 138-மணப்பாறை 138105 143850 11 281966 134663 139058 13 273734
2) 139-ஸ்ரீரங்கம் 146006 155607 46 301659 145107 154343 46 299496
3) 140- திருச்சி மேற்கு 129337 139201 32 268570 129350 139305 33 268688
4) 141- திருச்சி கிழக்கு 122015 129871 62 251948 121675 129593 63 251331
5) 142-திருவெறும்பூர் 140026 146454 65 286545 130372 135797 61 266230
6) 143-இலால்குடி 105600 113354 17 218971 104644 111738 19 216401
7) 144-மண்ணச்சநல்லூர் 119881 129062 43 248986 120029 129236 46 249311
8)145-முசிறி 110582 116418 21 227021 106524 111735 21 218280
9) 146-துறையூர்(தனி) 108606 116116 25 224747 106395 113276 27 219698
மொத்தம் 1120158 1189933 322 2310413 1098759 1164081 329 2263169
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் 1059/1000 (பெண்கள்/ஆண்கள்). திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 05.01.2023 அன்று வாக்காளர்பட்டியல் வெளியிட்டபோது மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544, நாளது தேதியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2547 (143-இலால்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி உயர்வு, 146 - துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள் கூடுதல்)
மேற்படி பட்டியலின்படி, தொடர் திருத்தங்களின் போது வாக்காளர் பட்டியலில் இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ள நபர்களுடைய பெயர்கள் படிவம்-7 பெற்ற பின்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் தூய்மையாக்கல் பணியின்போது தொடர்திருத்தங்கள் பணி மேற்கொண்டு மொத்தம் 63472 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெறவுள்ளது. மேற்படி சிறப்பு சுருக்க திருத்தத்தின் போது வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல,திருத்தம் மற்றும் நீக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிக்காக எதிர்வரும் 04.11.2023 (சனி), 05.11.2023 (ஞாயிறு), 18.11.2023 (சனி) மற்றும் 19.11.2023 (ஞாயிறு) ஆகிய கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சிறப்பு முகாம் நாளன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அளித்திடலாம்.
வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து சேர்த்துக் கொள்ளலாம். அயல்நாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6ஏ-இல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஏயும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விண்ணப்பங்கள்27.10.2023 முதல் 09.12.2023 வரை அனைத்து வேலை நாட்களிலும், நியமன வாக்குச்சாவடி அமைவிடத்தில் உள்ள நியமன அலுவலரிடம் மற்றும் (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ,வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை தாக்கல் செய்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் வாக்காளர்கள்; 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழி தகவல் பெற்றுக்கொள்ளலாம். எனவே 2024-ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்போது தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 04.11.2023 (சனி), 05.11.2023 (ஞாயிறு), 18.11.2023 (சனி) மற்றும் 19.11.2023 (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் வாக்காளர்பட்டியலுடன் தங்களது ஆதார்எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக ஆதார்அட்டை நகலினையும் எடுத்து வந்து படிவம் 6-பி யை பூத்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறும், மேற்படி வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு இளம் வாக்காளர்களை அடையாளங்கண்டு 100 சதவீதம் விடுதல் இன்றி வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்திடவும், இறந்து போன வாக்காளர்களை அடையாளம் கண்டு குடும்ப உறுப்பினர்களிடம் உரிய படிவமான 7- ஐ பெற்று வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரினை நீக்கிடவும், இரட்டைப்பதிவுகள் ஏதும் இருப்பின் அவற்றை கண்டறிந்து நீக்கிடவும் மற்றும் பிற திருத்தங்கள் செய்ய உதவிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
05.01.2023-இல் இருந்து தொடர் திருத்தங்களின் போது தவறுதலாக வாக்காளர்கள் பெயர் ஏதேனும் நீக்கப்பட்டிருப்பின், பொதுமக்கள் வாக்குச்சாவடி முகவர்கள் தெரிவிக்கும்பட்சத்தில், உரிய களவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணியானது நேர்மையாகவும் தூய்மையாகவும் 100 சதவீதம் நடைபெற அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சீனிவாசன், தேர்தல் வட்டாட்சியர்முத்துசாமி ஆகியோர் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu