உச்ச நீதிமன்ற எச்சரிக்கை வளையத்தில் சிக்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்

உச்ச நீதிமன்ற எச்சரிக்கை வளையத்தில்  சிக்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்

உச்சநீதிமன்றம்  (கோப்பு படம்).

மணல் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை வளையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிக்கி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கை வளையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிக்கி உள்ளார்/

தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மணல் அள்ளுவதில் கோர்ட் விதித்த நிபந்தனையை தாண்டி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி முறைகேடு செய்து அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் இழப்பு ஏற்படுத்தியதாக வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். ட்ரோன்கள் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை ஐஐடி நிபுணர்களும் சோதனையில் பங்கேற்றனர். இந்த சோதனையின் போது பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு திருச்சி, கரூர், வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் துணை போனதாக அமலாக்கத்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் முத்தையா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர்கள் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என அவர்கள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் ஆஜராக தேவையில்லை என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இது ஒரு தவறான முன்னுதாரணமாக கருதப்பட்டு விடும் .மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என தான் கூறப்பட்டுள்ளது அவர்களை குற்றவாளிகளாக சேர்க்கவில்லை ஆனால் அதற்கு அவர்கள் ஆஜராக மறுக்கிறார்கள் அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கு தொடர்ந்து உள்ளது என வாதாடினார்கள்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவதில் என்ன பிரச்சனை அவர்கள் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆஜர் ஆக வேண்டியது அவர்களது கடமை. கடமையை செய்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் வர முடியவில்லை எனக் கூறினார்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் பணி முடிந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாருக்கும் ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்டு இருப்பதால் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை வளையத்திற்குள் அவர் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story