மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது திருச்சி மாநகராட்சி முதல் கூட்டம்
திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகனிடம் வெள்ளி செங்கோல் வழங்கினார் மாவட்ட கலெக்டர் சிவராசு.
150 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சியாக இருந்து வரலாற்று சாதனை படைத்த திருச்சி கடந்த 1-6 -1994ஆம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. அந்தவகையில் 28 ஆண்டுகால திருச்சி மாநகராட்சி இதுவரை நான்கு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், மற்றும் உறுப்பினர்களுடன் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் 6 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு .க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றதும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் திருச்சி மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயராக மு.அன்பழகன் கடந்த 4ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 65 மன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட மேயர், துணை மேயர் ஆகியோருடன் கூடிய முதல் மாமன்ற கூட்டம் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன் ஏற்கனவே வழங்கிய 4 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட 5 அடி உயரமுள்ள செங்கோலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் மேயர் அன்பழகனிடம் வழங்கினார். அப்போது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த செங்கோலை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவிடம் ஒப்படைப்பு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர் மேயர் தலைமையில் முதல் மாமன்ற கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது 65 மாமன்ற உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தங்கள் வார்டில் உள்ள குறைகளையும், பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தனர்.
இதனால் காலை 10 மணிக்கு தொடங்கிய மாமன்ற கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. பிற்பகல் மதிய விருந்துக்கு பின்னர் அனைவரும் மாநகராட்சி வளாகத்தை விட்டு கிளம்பி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu