திருச்சி கலெக்டர் தலைமையில் தூய்மை பணி குறித்து மாணவிகள் உறுதி ஏற்பு
திருச்சியில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்த தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் திருச்சி மாநகராட்சி பாலக்கரை, ஹோலி ரெடிமர்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் மாநகரின் தூய்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
மேலும், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் மாணவர்களின் பங்களிப்பாக மாநகரின் தூய்மை குறித்து, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது
பொது இடங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், சுகாதாரத்தைப் பேணுவது நமது கடமை, தூய்மைப் பணி என்பது ஒரு நிகழ்வாக அல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு பணியாகக் கருதி, நமது சுற்றுப்புறத் தூய்மைப் பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களிடத்தில் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கம் மாணவ செல்வங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. ஆகவே உங்கள் பெற்றோர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றினை சேகரித்து தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி எடுத்துக் கூற வேண்டும். மேலும், அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் அ.அக்பர்அலி, மண்டல தலைவர் பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர் ஜி.கதிஜா, பள்ளியின் தாளாளர் அடைக்கலம் வெர்ஜினா மோரி, உதவி தலைமையாசிரியர் சகாயமோரி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu