குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தையல் மிஷின் வழங்கினார் திருச்சி ஆட்சியர்
பயனாளி ஒருவருக்கு தையல் மிஷின் வழங்கினார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப்குமார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 454 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நடத்துறையின் சார்பில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினையும், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கத்தின் வாயிலாக 9 மகளிருக்கு ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், நான்கு நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும், இக்கூட்டத்தில் மனு அளித்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த கனகா என்பவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உடனடியாக இலவச தையல் இயந்திரத்தினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், சமூக நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம், 10 பெண்குழந்தைகளுக்கு வைப்புத் தொகைக்கான பத்திரங்களை குழந்தைகளின் பெற்றோர்களிடத்திலும், கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த 3 பேருக்கு தலா ரூ. 20ஆயிரத்திற்கான வைப்புத் தொகை, 12 ஆம் வகுப்பு வரைபடித்த 5 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை என 8 பேருக்கு வைப்புத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பார்த்திபன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், தனித் துணை ஆட்சியர் அம்பிகாபதி, மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu