திருச்சி காவிரி பாலம் 15 நாளில் திறக்கப்படும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள திருச்சி காவிரி பாலம் இன்னும் 15 நாட்களில் திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய்க்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 1730 மாணவிகளை தேர்வு செய்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 820 மாணவிகளை வரவழைத்து இந்த திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மாணவிகளுக்கு அவர்களுடைய வீட்டு முகவரிக்கு டெபிட் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்குபவர்கள் மற்றும் கடத்தலை தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணி முழுமையாக முடிவடைந்துவிட்டது. இன்னும் 15 நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காவிரி பாலம் திறந்து விடப்படும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மழையால் பாதிக்கப்பட்ட நிலமாக இன்று வரை 81 ஏக்கர் கணக்கிடப்பட்டுள்ளது தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu