திருச்சி காவிரி பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

திருச்சி காவிரி பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
X
திருச்சி காவிரி பாலம் பைல் படம்.
திருச்சி காவிரி பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி காவிரி பாலம் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகுமாதலால், மேற்படி காவிரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை 10.09.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்கள் நீங்கலாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாலத்தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் பொருத்தும் பணி ஒவ்வொரு தட்டுகளாக மேற்கொள்ளும் நிலையில் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் என்கிற காரணத்தால் இரு சக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணி வரும் 21.11.2022 முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க 20.11.2022 (இன்று) நள்ளிரவு முதல் பாலத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்து முன்னர் அறிவிக்கப்பட்டப்படி இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் கீழ்கண்ட மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிடப்படுகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் - சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்.

காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதையில் இரு சக்கர வாகனங்கள் உள்ளி;ட்ட அனைத்து வித வாகனங்களும் பயணம் செய்து நல்ஒத்துழைப்பு வழங்கிடும்படி பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்