பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தகர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இன்று த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் முஹம்மது ராஜா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது வரவேற்பு உரையாற்றினார்.
இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்களின் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அப்துல் சமது எம்.எல்.ஏ.செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வருடம் தோறும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி வழக்கில் மோசமான அநீதியான தீர்ப்பு அமைந்த போதிலும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முஸ்லிம் சமுதாய மக்கள் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
1991 ல்வழிபாட்டு தலங்களின் சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் கூறுவது என்னவென்றால் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வழிபாட்டுத் தலங்களில் எப்படி இருந்ததோ அதேபோன்று அனைத்து மத வழிபாட்டு தலங்களும் செயல்பட வேண்டும். அதில் எந்தவிதமான சர்ச்சைகளும் உருவாகக் கூடாது என்பதாகும். ஆனால் இந்த சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வன்முறைகளும் முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. ஆகையால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu