முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் முன்விரோதம் காரணமாக கொலைசெய்ய முயன்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 17.12.2021-ந்தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிரோடு பகுதியில், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காதர்மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளியான காதர்மொய்தீன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் எனவும் விசாரணையில் தெரிய வருவதால், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் காதர்மொய்தீன் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!