திருச்சியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் உள்பட 3 பேர் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் உள்பட 3 பேர் தற்கொலை
X
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திரகாரதெரு பகுதியை சேர்ந்தவர் சுல்தான்கான். இவரது மகன் மொய்தீன்கான் (வயது29). இவர், பஸ் பாடி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நூர்ஜகான் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மொய்தீன்கான், மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் கோபித்துக்கொண்டு கடந்த மாதம் நூர்ஜகான் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொய்தீன்கான் தோகைமலை சென்று தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ். (47). கட்டிட தொழிலாளியான இவர் குடும்ப தகராறில் கடந்த 5 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல், திருச்சி உறையூர் கீழவைகோல்கார தெருவை சேர்ந்தவர் சங்கர் (29). கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த சங்கருக்கு காளீஸ்வரி (27) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags

Next Story