தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.
திருச்சியில் தீரன் சின்னமலை சிலைக்கு இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ் மன்னர்கள், பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அந்த வகையில் நெல்லை சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தாரோ அதேபோல கொங்கு மண்டலத்தில் சங்ககிரி கோட்டையில் ஆட்சி செய்த தீரன் சின்னமலை ஆங்கிலேய படைகளை ஓட ஓட சிதறடிக்க செய்தவர். 200 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெள்ளைய படைகளுக்கு எதிராக நடத்திய போர்கள் மற்றும் அவர் ஆற்றிய வீரச் செயல்களை இன்று நினைத்துப் பார்த்தாலும் உடலை புல்லரிக்கச் செய்யும்.
அத்தகைய சிறப்புக்குரிய தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. அந்த காலகட்டத்தில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் படை வீரர்களிடமிருந்து வரிப்பணத்தை பறித்துக் கொண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் சின்னமலை பறித்துக் கொண்டான் என்று உன் மன்னனிடம் போய் சொல் என்று கூறி அன்றே வீரத்தை வெளிப்படுத்தியவர் தீர்த்தகிரி. அதன் பின்னரே அவர் தனது வீர தீர செயல்களால் தீரன் சின்னமலை என அழைக்கப்பட்டார். அவரது வீரத்தை மெச்சிய திப்புசுல்தான் தனது தீரன் சின்னமலையை தனது படைத்தளபதியாக நியமித்துக்கொண்டார்.
1801ஆம் ஆண்டு வெள்ளையப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த கர்னல் மேக்ஸ்வெல் என்பவனின் தலையை துண்டாக வெட்டி எடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இத்தகைய சிறப்புக்குரிய மாவீரன் தீரன் சின்னமலை பின்னர் நயவஞ்சகர்களால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரால் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.அவரது 218 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu