கடைக்குள் புகுந்து வியாபாரியை மிரட்டிய ரவுடிக்கு 7 வருடம் சிறை தண்டனை

கடைக்குள் புகுந்து வியாபாரியை மிரட்டிய ரவுடிக்கு 7 வருடம் சிறை தண்டனை
X

திருச்சி கோர்ட்டு (கோப்பு படம்).

கடைக்குள் புகுந்து வியாபாரியை மிரட்டிய ரவுடிக்கு 7 வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடைக்குள் புகுந்து வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிக்கு ஏழு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி கருமண்டபம் பகுதி செல்வா நகரில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருபவர் நித்தியானந்தம் (வயது 41).இவர் கடந்த 12 -9 -2019 அன்று தனது கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வயலூர் ரோடு சீனிவாசன் நகர் பகுதி ஔவையார் தெருவை சேர்ந்த புஜ்ஜி இம்ரான் (வயது 29 )என்ற ரவுடி அங்கு வந்தார்.

நித்யானந்தத்திடம் கத்தியை காட்டி மிரட்டி தண்ணி அடிக்க வேண்டும். 500 ரூபாய் காசு கொடு என்று கேட்டார். அதற்கு நித்தியானந்தம் உனக்கு ஏன் நான் பணம் தர வேண்டும் என திருப்பி கேட்டார். உடனே புஜ்ஜி இம்ரான் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பணம் தரவில்லை என்றால் குத்தி விடுவேன். என் பெயரை கேட்டாலே எல்லோரும் நடுங்குவார்கள். நீ என்னடா பணம் தர மறுக்கிற என கேட்டு தகராறு செய்தார்.

இதனை தடுக்க வந்த சிலரை பார்த்து யாராவது கிட்ட வந்தீங்கன்னா குடலை உருவி மாலையா போடுவேன் என கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அவர்கள் பயந்து ஓடினார்கள். அப்போது புஜ்ஜி இம்ரான் நித்யானந்தம் பையில் வைத்து இருந்த 500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார். இது பற்றி நித்யானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் புஜ்ஜி இம்ரானை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சந்திரா குற்றம் சாட்டப்பட்ட புஜ்ஜி இம்ரானிற்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்