திருச்சியில் பழுதடைந்த பொன்மலை ரயில்வே பாலம் சீரமைக்கும் பணி துவக்கம்
திருச்சியில் பழுதடைந்த பொன்மலை ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் அதனை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகில் சென்னை வழித்தடத்தில் உள்ள ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கடந்த 11ஆம் தேதி பழுது ஏற்பட்டது.
இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அச்சாலையில் சென்னை- திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது.மேலும் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது .பொங்கல் விடுமுறை என்பதால் போக்குவரத்து குறைவாக உள்ளது.இந்த பாலம் மிக முக்கியமான பாலம் என்பதால் அதனை சீரமைக்கும் பணி உடனடியாக துவங்கி உள்ளது.
மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்தும் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருச்சி என் ஐ டி சென்னை ஐஐடி குழுவினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக பொன்மலை மேம்பாலத்தில் முதற்கட்ட சீரமைப்பு பணிகள் தொடங்குவதற்காக சென்னை ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் துறை கட்டமைப்பு பொறியியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பான நிபுணர்களின் அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி என்.ஐ.டி நிபுணர் ஒருவர் பாலத்தை வலுப்படுத்துவதற்கான குறுகிய கால தீர்வையும் சமர்ப்பித்து உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகளில் அனுபவமிக்க நிபுணர்களை கொண்டு பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியில் வலுப்படுத்தும் பணிகள் பூஜைகளுடன் தொடங்கியுள்ளன. மேலும் பாலத்தில் மண்ணரிப்பு ஏற்பட்ட பகுதியை வலுப்படுத்தும் வகையில் மணல் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பழுதடைந்த பகுதிகளுக்குள் தொழிலாளர் தொழிலாளர்களை அனுப்பி அங்கு சேதம் அடைந்த கற்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது தொடர்ந்து தொழில்நுட்ப அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu