திருச்சி மாநாட்டில் அரசு பள்ளிகளுக்கு சீர் வரிசை வழங்கிய அமைச்சர்
திருச்சியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்ற காட்சி.
இன்று (07.02.2024) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 7 மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பங்கேற்ற பெற்றோரை கொண்டாடுவோம் மண்டல மாநாட்டில் 7 மாவட்டங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ள 152 பள்ளி சீர்வரிசைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எடுத்து வந்து அரசு பள்ளிகளுக்கு வழங்கி அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களை பாராட்டி கௌரவித்து விழாப் பேருரையாற்றினார்.
இம்மண்டல மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தை அறிவு சார்ந்த சமூகமாக உயர்த்திடும் நோக்கில் பள்ளிக் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவ, மாணவியர்களின் வளர்ச்சி என்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டுப்பொறுப்பு என்பதை வலியுறுத்தும் நோக்கில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பெற்றோர்களை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்புற நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு கல்வி இடைநிற்றல் அறவே இருத்தல் கூடாது என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின் கல்வி வளர;ச்சி என்பது ஆசிரியர் மற்றும் பெற்றோர் என இருவரின் கூட்டுப்பொறுப்பு என்பதை உணர வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலையின் காரணமாகவோ, வறுமையின் காரணமாகவோ பள்ளிக்கு வராமல் வேலைக்கு செல்லும் குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கல்வி கற்க தனி அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்காகவும் தன்னார்வலர்கள் மாவட்ட வாரியாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 586 பங்களிப்பாளர்கள் 11.50 கோடியும், கரூர்மாவட்டத்தில் 70 பங்களிப்பாளர்கள் 11.17 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 136 பங்களிப்பாளர்கள் 42.84 கோடியும், நாமக்கல் மாவட்டத்தில் 101 பங்களிப்பாளர்கள் 163 கோடியும், திருவாரூர் மாவட்டத்தில் 109 பங்களிப்பாளர்கள் 5.34 கோடியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 464 பங்களிப்பாளர்கள் 11.61 கோடியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 134 பங்களிப்பாளர்கள் 98.87 இலட்சம் என மொத்தம் 1600 பங்களிப்பாளர்கள் 246.48 கோடியும் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, தொடக்ககல்வி இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் முனைவர்.நாகராஜமுருகன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் முத்துக்குமார், பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu