இடம் மாறுகிறது திருச்சி மத்திய சிறை

இடம் மாறுகிறது திருச்சி மத்திய சிறை
X

திருச்சி மத்திய சிறை  (கோப்பு படம்).

Trichy Central Jail-திருச்சி மத்திய சிறை ரிங் ரோடு பகுதிக்கு இடம் மாற உள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை நகரை விட்டு வெளியே புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

Trichy Central Jail-திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு என்ற இடத்தில் திருச்சி மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மத்திய சிறைச்சாலை மிகவும் பழமை வாய்ந்ததாகும். தமிழகத்தில் மொத்தம் ஒன்பது இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் சென்னை, கோவைக்கு அடுத்து மிகப் பழமையானது திருச்சி மத்திய சிறை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மத்திய சிறை 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக திருச்சி மத்திய சிறை உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்கள் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். திருச்சி மத்திய சிறையில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கட்டிடங்கள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புகள் எல்லாம் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து கட்டப்பட்டிருக்கிறது. தேக்கு உள்ளிட்ட மரங்கள் பர்மாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருந்திருக்கிறது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைச்சாலை திருச்சி ரிங் ரோடு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக அங்கு சுமார் 240 ஏக்கர் தமிழக அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை சிறைத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு விட்டு வந்திருகிறார்கள். திருச்சி மத்திய சிறையை ரிங் ரோடு பகுதிக்கு மாற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசின் அனுமதிக்காக ஒரு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் புதிய இடத்தில் சிறைச்சாலை கட்டுமான பணிகள் தொடங்கும். அதன் பின்னர் திருச்சி மத்திய சிறை முழுவதுமாக அங்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியுடன் சேர்த்து மதுரை மத்திய சிறையும் வேறு இடத்திற்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

திருச்சி மத்திய சிறையை பொறுத்தவரை தற்போது சுமார் 2000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள், சிலை கடத்தல் தொடர்புடையவர்கள், அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ,ஆயுள் தண்டனை செய்திகள், மரண தண்டனை தேதிகள் என பல வகையினர் உள்ளனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டு கைதிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை நேரங்களில் திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் வளர்க்கப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது தவிர காய்கறி தோட்டம் அமைத்து கைதிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மத்திய சிறை வளாத்திலேயே சிறப்பு முகாம் ஒன்றும் உள்ளது .அந்த சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய இடத்தில் சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டதும் திருச்சி மத்திய சிறை வளாகம் முழுவதும் அப்படியே அங்கு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை மாற்றம் செய்யப்பட்ட பின்னர் தற்போது மத்திய சிறை சாலை உள்ள இடம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மத்திய சிறை அருகில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. சிறை வளாகம் மாற்றப்பட்டால் ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டு அந்த பகுதியில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
why is ai important to the future