திருச்சியில் ரசீது இல்லாமல் இயங்கும் தற்காலிக டூவீலர் பார்க்கிங்
திருச்சி யானை குளம் தற்காலிக பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டூவீலர்கள்.
திருச்சியில் தீபாவளி பண்டிகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பார்க்கிங் ரசீது இல்லாமல் இயங்குவதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி நகரில் முக்கிய வணிக கேந்திரமாக விளங்கும் திருச்சி என். எஸ். பி. ரோடு. பெரிய கடைவீதி. மேலரண் சாலை, சின்ன கடை வீதி, தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு காரணமாகவும் மாநகர போலீசார் ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கடைவீதி பகுதிக்குள் கார்கள் மற்றும் டூவீலரில் செல்வதற்கு அனுமதி இல்லை என்பதால் கடைவீதி பகுதியை ஒட்டி நான்கைந்து இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பார்க்கிங் மாநகராட்சிக்கு சொந்தமான சிங்காரத்தோப்பு யானை குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கடைவீதிக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு வரும் மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு உரிய கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பார்க்கிங் மையத்தை நடத்துபவர்கள் யார் என தெரியவில்லை. மாநகராட்சி நேரடியாக நடத்துகிறதா அல்லது குத்தகைக்கு விட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. ஒரு இருசக்கர வாகனத்திற்கு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
இது மிகவும் அதிகமான கட்டணம் என கருதும் பொதுமக்கள். இந்த கட்டணத்துக்குரிய ரசீது கேட்டால் ரசீதெல்லாம் கிடையாது. அட்டையில் தான் எழுதி தருவோம் என வண்டி எண் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முறை கேட்டிற்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். இதனை முறைப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே. சி. நீலமேகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu