திருச்சியில் ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
திருச்சியில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கைக்காக இந்த போராட்டம் நடந்து வருகிறது.போராட்டத்தின் பல கட்டமாக ஏற்கனவே ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் போன்றவற்றை தமிழக முழுவதும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.அதற்கு முன்னதாக இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர் .அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களில் 200க்கும் மேற்பட்ட வர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றார்கள். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu