திருச்சி அருகே மாணவனின் தூக்கத்தை கெடுத்த டீச்சர்: போக்சோ சட்டத்தில் கைது

கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை தேவி.
தவறான நோக்கத்தில் மாணவனிடம் பேசி அவரது தூக்கத்தை கெடுத்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்கு தாய் போல், ஒரு சகோதரி போல் இருந்து பாடம் நடத்த வேண்டும் என்பது பெற்றோர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால் சில ஆசிரியைகள் தங்களிடம் பயிலும் மாணவர்களை தங்களது உடல் ஆசைக்கு பயன்படுத்திக் கொள்ளும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் நடந்து வருகிறது. இது போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது .அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வலையபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (வயது 40 )இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவர் தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னிடம் டியூசன் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் அவர் தவறான நோக்கத்தில் பழகியுள்ளார். இதனால் அந்த மாணவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பெற்றோர் அவனது செல்போன் மற்றும் வாட்ஸ் அப் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். இதில் பள்ளி ஆசிரியை தேவி தினமும் இரவில் வெகு நேரம் மாணவனிடம் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர். குழந்தை நல அமைப்பினர் ஆசிரியை மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu