திருச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

திருச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
X
திருச்சியில் நடந்த தமிழ் இணைய கல்வி கழகத்தின் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.
திருச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி இன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பேசும்போது கூறியதாவது:-

நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், தமிழர் பண்பாட்டில் கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வளரும் தலைமுறையான உங்களுக்கு உணர்த்துவதன் மூலம் நீங்கள் அடுத்து வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால், விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும். நமது பண்பாட்டின் உயர்ந்த தகவல்கள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும்.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது தான் ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும். கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நமது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் நடந்த உணவுப் புரட்சியும், சமூக மாற்றமும் என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் , தமிழரின் அறிவியல் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா சொற்பொழிவாற்றவுள்ளார்கள்.

ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், சிறப்புரையாற்றியவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்ட 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ் அவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

முன்னதாக, மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில், கல்விக்கடன் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள், போட்டித் தோ;வு தொடர்பான நூல்கள், இணைதள தகவல்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்கள் கல்வி பயிலும் போதே தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான திறனை குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக அரசு வழங்கும் முதலமைச்சரின் மாபெரும் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் தொடர்பான அரங்குகளும், மாணவர்களுக்கான திறன் பயிற்சி மற்றும் தாட்கோ சார்பில் அளிக்கப்படும் கல்வி உதவி தொடர்பான கண்காட்சி அரங்குகள், புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கவிஞர்மனுஷ்யபுத்திரன், கவிஞர் நந்தலாலா, வருவாய்க் கோட்டாட்சியர் தவச்செல்வம், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) செல்வம், மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் துணை இயக்குனர் மகாராணி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர் இஸ்மத்பானு உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business