திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோயிலில் சுவாமி நகை திருட்டு
திருச்சியில் சுவாமி நகை திருடப்பட்ட கோயில்
திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி விழா நடைபெறவதை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நவராத்திரி விழாவின் 6-வது நாளை முன்னிட்டு மோகினி அலங்காரத்தில் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை கோவிலை திறக்க இளைஞர் குழு தலைவர் ஆறுமுகம் அங்கு வந்தார். அப்பொழுது கோவிலில் உள்ள உற்சவர் அம்மனின் கழுத்தில் இருந்த நகைகள் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மர்ம ஆசாமிகள் கோவிலின் வெளிபூட்டை உடைக்காமல் கேட் பகுதியின் வலது புறத்தில் உள்ள திரையை திறந்து ஒரு பெரிய குச்சியை விட்டு உற்சவர் அம்மனின் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்று உள்ளது தெரியவந்தது.
மேலும் திருட்டுப்போன நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிய வந்தது. இதன் அருகில் மூலவர் சாமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருட வில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu