திருச்சி ஜே.கே.நகரில் தேங்கி நிற்கும் தண்ணீரால் 'டெங்கு' பரவும் அபாயம்

திருச்சி ஜே.கே.நகரில் தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு பரவும் அபாயம்
X

திருச்சி ஜே.கே.நகரில்  மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடியில்  மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

திருச்சி ஜே.கே.நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடியில் தேங்கி நிற்கும் தண்ணீரால் ‘டெங்கு’ பரவும் அபாயம் உள்ளது.

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35-வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். ஜே. கே. நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் இப்பகுதி நகரின் விரிவாக்க பகுதியாகும்.

இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க. ஆட்சியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமாக தற்போது ஜே.கே. நகர், லூர்து நகர்,முகமது நகர், ராஜ கணபதி நகர், பாரதி நகர், ஆர்.எஸ். புரம், ஆர். வி .எஸ். நகர் ,திருமுருகன் நகர், காந்தி நகர் மற்றும் விமான நிலைய விரிவாக்க பகுதிகளுக்கு வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பள்ளமான பகுதியில் அமைந்திருப்பதால் அதன் அடிப்பகுதியில் எப்போதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெள்ளம்போல் பெருக்கெடுத்து வந்த மழைநீர் அனைத்தும் தண்ணீர் தொட்டி பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

மேலும் தொட்டியில் இருந்து செல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாகவும் தண்ணீர் தேங்குகிறது. இப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் மூலமாக சுகாதாரக்கேடு ஏற்படவும், டெங்கு காய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசுவை ஒழிக்க வீடுதோறும் பணியாளர்களை அனுப்பி டயர் மற்றும் கொட்டாங்கச்சி, பயன்படுத்தப்படாத பொருட்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துங்கள் என பிரசாரம் செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாக குளம்போல் தேங்கி நிற்கும் இந்த பகுதியை கண்டுகொள்ளவில்லை. இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பிருப்பதால் இதனை அப்புறப்படுத்தி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story