திருச்சியில் மாணவர்கள் பங்கேற்ற சிறு தானிய உணவு விழிப்புணர்வு பேரணி
திருச்சியில் நடைபெற்ற சிறு தானிய உணவு விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்றார்.
திருச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
சிறுதானியங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. சிறு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நமது முன்னோர்கள் நீண்ட வருடம் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்துள்ளனர்.காலப்போக்கில் நாம் நவநாகரீக உலகில் பீட்சா, பர்க்கர் மற்றும் புரோட்டா என ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து நமது உடலில் ஒட்டிக்கொள்கின்றன. அதனால் தான் பிரதமர் மோடி இந்தியா சார்பில் 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய உணவு ஆண்டாக அறிவித்துள்ளார். இதனையொட்டி சிறுதானிய உணவுகளின் அவசியம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பாண்டி, பொன்ராஜ், இப்ராஹிம், செல்வராஜ், மகாதேவன், கந்தவேல், அன்புச்செல்வன், வடிவேல் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும் சிறுதானிய உணவை உண்ண வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கார்போஹைட்ரேட் உணவை தவிர்த்து சிறுதானிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானிய உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறுதானிய உணவே சிகரம் தொடும், வாழ்வை தரும் சாமை சோறுக்கு ஆமை வயது ,கேழ்வரகு உணவு சர்க்கரை நோய்க்கு எதிரி, வரகு உணவை உண்டால் வாழ்க்கை வரமே, கம்பு உடலுக்கு தெம்பு, சோழ உணவே சோம்பலை நீக்கும், தினை உணவு இதயத்தின் துணை, திணை மாவை தின்று திடமான உடலை பெறுவீர், சாமை உணவுகளே சத்தின் ஆதாரம், சிறுதானிய உணவுகளே சிரமமற்ற வாழ்வை தரும், குதிரைவாலி உணவை உண்டு குறைவற்ற நலம் பெறுவீர், மற்றும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நீதிமன்றம் ரவுண்டானா வரை நடைபெற்றது. மேலும் உணவுக் கலப்படம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறி அதற்கான தொடர்பு எண்களையும் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu