தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை அடங்கிய 19 பார்சல்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை அடங்கிய 19 பார்சல்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக், புகையிலை அடங்கிய 19 பார்சல்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபுவுக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸாரின் உதவியுடன் திருச்சி இ.பி ரோட்டில் உள்ள கோட்டை காவல் உதவி மையம் அருகே செயல்பட்டு வரும் வீ.ஆர்.எல் லாரி பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.‌

இந்த சோதனையின்போது வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் புகையிலை அடங்கிய 19 பார்சல் பண்டல்களை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் காந்தி மார்க்கெட் ஆய்வாளர் சுகுமார், கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்ட போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரிலிருந்து வீ.ஆர்.எல் லாரி பார்சல் சர்வீஸ் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து மணப்பாறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு செல்ல இருப்பது தெரிய வந்தது.

மேலும் இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பார்சல் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கோட்டை காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக நேற்று மாலை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி மாவட்டத்தில் புகையிலையை ஒழிப்பதற்காக இரவு பகலாக மக்கள் பணியாற்றி வரும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!