திருச்சி அருகே குளத்திற்குள் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு சீல் வைப்பு

சீல் வைக்கப்பட்ட பள்ளியின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சி அருகே குளத்திற்குள் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, ஜெரிக்கே உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி ஆகிய 3 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளை தேவராஜ் என்பவரும் பாதிரியார் அன்பரசு என்பவரும் தாளாளராக இருந்து நிர்வகித்து வருகிறார்கள்.
இந்த 3 கல்வி நிறுவனங்களும் அளுந்தூர் குளத்திற்குள் சுமார் 2.60 எக்டேர் நிலத்தில் கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் குளத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை அகற்றும் கலெக்டரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் செந்தில் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளியை மூட உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இந்த 3 பள்ளிகளை மூடுவதற்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். ஆனால் ஏப்ரல் 30-ந்தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காலி செய்து கொள்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை இடத்தை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.புதிய கல்வி ஆண்டில் இன்று பள்ளி தொடங்கிய நிலையில் மாணவர்களின் நலன் கருதி கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் 3 பள்ளிகளையும் ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் (தனியார் பள்ளிகள்) முன்னிலையில் வருவாய் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் நேற்று மூடி சீல் வைத்தனர்.
இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீல் வைக்கப்பட்டு பூட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இதனை கேள்விப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியின் முன்பு குவிந்தனர். தகவல் அறிந்த மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, ராம்ஜி நகர் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே மாணவ, மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, செவல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினர்.
கோர்ட்டு உத்தரவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று போலீசார் விளக்கமளித்தனர். இதனால் தற்போது இந்த 3 பள்ளிகளிலும் பயின்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu