பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது
X

கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ஜேம்ஸ்.

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமீபகாலமாக ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சில மாணவிகள் தற்கொலையும் செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியை நிர்வகிக்கும் தாளாளர் ஒருவர், போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் சி.இ.மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் ஜேம்ஸ் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். பள்ளியுடன் சேர்ந்து மாணவ, மாணவிகள் தங்கும் விடுதியும் பள்ளி வளாகத்திலேயே உள்ளது. அந்த விடுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பெற்றோரை இழந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையின்போது, பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். ஆதரவற்ற மாணவிகள் சிலர், ஊருக்கு செல்ல முடியாமல் விடுதியிலேயே தங்கி இருந்தனர்.

அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி மட்டும் தனியாக விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வேளையில் மாணவிகள் விடுதிக்கு சென்ற பள்ளி தாளாளர் ஜேம்ஸ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் சீண்டல்கள் அடிக்கடி தொடர்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை சக மாணவிகளிடம், அந்த மாணவி சொல்லி அழுததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவி தனது பாதுகாவலரின் வீட்டுக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பாதுகாவலரிடம் கூறி இருக்கிறார். இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பாலியல் சீண்டல் வழக்கு என்பதால், இந்த புகார், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மீராபாய் தலைமையிலான போலீசார், பள்ளிக்கு நேரில் சென்று மாணவிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி தாளாளர் ஜேம்ஸ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தாளாளரை கைது செய்தனர்.

மேலும் கைதான தாளாளர் ஜேம்சிடம் மாநகர கூடுதல் துணை கமிஷனர் வனிதாவும் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சியில் பள்ளி தாளாளர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பள்ளி தாளாளர் ஜேம்ஸ், மாணவியிடம் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தகவல், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து ஜேம்சை, உடனடியாக பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!