பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
X
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடந்தது தொடர்பாக 11 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதூா் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இதில், அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். இந்த வகையில் சுமாா் 70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக, லால்குடியைச் சோ்ந்த உதயகுமாா் என்பவா், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டே வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறிழைத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த வழக்கு கடந்த மாா்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறைகேடு நடந்ததாக கூறப்படும் 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வருபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணகுமாா், புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், துறையூா் ஓவா்சியா் வெங்கடேஷ்குமாா், முன்னாள் தொழில்நுட்ப உதவியாளா் கிளிண்டன், மண்ணச்சநல்லுாா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ், அந்தநல்லுாா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காளிதாஸ், இளநிலை பொறியாளா்கள் ரங்கநாதன், தாத்தையங்காா்பேட்டை பரணிதா், இவா்களுக்கு உடந்தையாக இருந்ததாக தனிநபா் தமிழ்செல்வன் ஆகிய 11 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலி ஆவணங்களை உருவாக்குதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!