சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பில் ரூ.87 லட்சம் ரொக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் (கோப்பு படம்)
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியன் திறப்பின்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.87 லட்சம் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்கோவில் ஆகும். இந்த கோவிலானது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தமிழக அளவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் வருவாயில் பழனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தேர் வடம் பிடித்து இழுப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரொக்க பணம் 87 லட்சத்து 57 ஆயிரத்து 91 ரூபாயும், தங்கம் 918 கிராமும், வெள்ளி ஒரு கிலோ 644 கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 103ம் ,வெளிநாட்டு நாணயங்கள் 240ம் இருந்தன.
உண்டியல்கள் அறங்காவலர் குழு தலைவர் விஎஸ்பி இளங்கோவன், உறுப்பினர்கள் பிச்சை மணி, ராஜசுகந்தி, லெட்சுமணன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, மற்றும் கோவில் அதிகாரிகள் ரவிச்சந்திரன், அனிதா,சீனிவாசன், கோவில் செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu