திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.9 லட்சம் நகைகள்: போலீசார் விசாரணை
உரிய ஆவணமின்றி எடுத்துவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில், பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகள் ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு வெங்கடேஷ் மேற்பார்வையில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒரு பயணியின் பையில் வெள்ளி நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அதன் உரிமையாளர் விகாஸ் ஜெகதீஷ்சந்திரா ராவல் என்பதும், மராட்டிய மாநிலம் மேற்கு மும்பை பகுதியில் உள்ள போரிவலி தேவேந்திர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வெள்ளி வியாபாரி என்பதும், அவருக்கு சென்னை செவன்வெல்ஸ் பகுதியில் வெள்ளி ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடை இருப்பதும் தெரியவந்தது.
அவர் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு செல்ல எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் வெள்ளி நகைகளை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இதுகுறித்து மாநில வருமான வரித்துறையின் திருச்சி பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருச்சி நுண்ணறிவுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரனும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் விகாஸ் ஜெகதீஷ்சந்திரா ராவல் புதுச்சேரி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து விட்டு, திருச்சியில் இருந்து ரயில் மூலம் தஞ்சைக்கு செல்ல தயாரானபோது ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது தெரியவந்தது.
பின்னர் அந்த நகைகள் கணக்கெடுக்கப்பட்டதில், ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 940 மதிப்பிலான 13½ கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. பின்னர் உரிய ஆவணங்கள் இன்றி வரி ஏய்ப்பு செய்து வெள்ளி நகைகளை விற்பனைக்கு எடுத்து சென்ற வகையில் அவருக்கு ரூ.56 ஆயிரத்து 456 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை விகாஸ் ஜெகதீஷ்சந்திரா ராவல் ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு மீண்டும் அவற்றை பெற்றுச் சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu