திருச்சி: பட்டா பெயர் மாற்ற ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
திருச்சியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தாசில்தார் கோகுல்.
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் (வயது47).இவருக்கு சொந்தமான நிலம் வயர்லெஸ் ரோட்டில் உள்ளது இதில் 1.11 ஏக்கர் நிலம் அங்குராஜ் என்பவரின் அனுபவத்தில் உள்ளது.இதற்கு அந்த நபர் போலியான ஆவணங்களை வைத்து தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதை கண்டறிந்த சீனிவாசன் அந்த பட்டாவை ரத்து செய்ய கோரி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலக செட்டில்மென்ட் சிறப்பு தாசில்தார் கோகுலை அணுகி மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென தாசில்தார் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர் போலீசார் சாதாரண உடையில் மறைந்து இருந்தனர். அப்போது சிறப்பு தாசில்தார் கோகுலிடம், புகார் தாரர் சீனிவாசன் போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோகுலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் கோகுலிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்த போலீசார் திருச்சி உறையூர், ராமலிங்க நகரில் உள்ள கோகுலின் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu