திருச்சியில் ரூ. 50 கோடியில் தடுப்பு சுவர்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உய்யகொண்டான் திருமலை .சண்முக நகர், ஆதி நகர், வினோபா காலனி, பாத்திமா நகர், தியாகராஜ நகர், லிங்கம் நகர், செல்வம் நகர், கருமண்டபம் காந்திநகர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை உடனடியாக சீர் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்
திருச்சியை பொறுத்தவரை உய்யகொண்டான் திருமலை, லிங்கா நகர், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் உள்ளே வராத வகையில் செயல்படுத்த 50கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்பட உள்ளது.சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு வடிகால் வாய்க்கால் கட்டப்படவில்லை வெறும் பூங்காக்களையும் உடற்பயிற்சி கூடங்களில் மட்டுமே உருவாக்கி வைத்துள்ளனர். 800கோடி ரூபாய் எங்கே செலவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு முதல்வர் விசாரணை கமிஷன் அமைத்து உள்ளார். திருச்சியில் ஒரு வடிகால் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான். ஏற்கனவே நாங்கள் வடிகால் வாய்க்கால்களை தூர்வார முறைப்படி வைத்திருந்தோம். கடந்த பத்தாண்டுகளில் மாநகராட்சி பகுதிகளில் இரண்டு கட்டடங்கள் மட்டுமே கட்டியுள்ளனர். ஒரு பணியும் நடைபெறவில்லை. செய்ய தவறிவிட்டனர் என்றார்.
மேலும் மழையினால் திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தின் வெளிப்பகுதி வழியாக கொல்லாங்குளத்தில் இருந்து நீர் நிரம்பி வாய்க்கால் வழியாக கோரையாற்றுக்குச் செல்வதைப் பார்வையிட்டு, வாய்க்காலினை அகலப்படுத்தி தூர்வாரி தண்ணீர் செல்லும் சிறு பாலத்தினை மேலும் பெரிதாக அகலப்படுத்தி கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், முன்னாள் துணை மேயர் அன்பழகன் ,மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu