மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு சீல்
வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள், கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாடகைதாரர்கள் சிலர், முறையாக வாடகை மற்றும் குத்தகை தொகையை செலுத்தவில்லை. மாறாக அவர்கள் உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தனர். வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் முக்கிய புள்ளிகள் என தெரிய வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அறநிலையத்துறையில் உள்ள பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களுக்கு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுமாமி கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள கடைகளின் வாடகை பாக்கி ரூ.6 கோடி அளவில் உள்ளது.
இதில், வாடகை கட்டாத கடைகள் குறித்த பட்டியலை தயாரித்த கோயில்உதவி ஆணையர் விஜயராணி, வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்து, அதற்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோட்டை போலீசில் இன்று மனு அளித்தார். முன்னதாக மலைக்கோட்டை வாசலில் உள்ள ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது வியாபாரிகள் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அப்போது கோயில் அதிகாரிகளிடம் பேசிய போலீசார் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் போதிய போலீஸ் பாதுகாப்பு உடனடியாக அளிக்க முடியாது என கூறினர். மேலும், இதுகுறித்து வழக்கு நிலுவையில் உள்ளதாலும், தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர். மேலும், வியாபாரிகளும் வாடகையை கட்டி விடுவதாகவும், அதற்குரிய காலக்கெடு வழங்க கோரினர். இதையடுத்து, வாடகை தராத கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இச்சம்பவத்தால் மலைக்கோட்டை பகுதியில் இன்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu